Categories
தமிழாய்வு கட்டுரைகள்

தமிழின் சிறப்பு பகுதி : ௨ (2)

நாம் ஏற்கனவே முதல் பகுதியில் தமிழ்மொழியின் தோற்றம் குறித்தும், நம்மை அடையாளப்படுத்தும் சங்ககாலம் குறித்தும், சங்காலத்திற்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என பார்த்தோம் அல்லவா ? எனக்குள் ஏற்பட்ட சந்தேகங்களை உங்களுடன் விவரித்தேன் அல்லவா ? இப்போது அதன் தொடர்ச்சியாக 2 – ஆம் பகுதியை நாம் காணப்போகிறோம்.

தமிழை வளர்ப்பதற்காக பாண்டிய மன்னர்கள் புலவர்களை கூட்டி தமிழை ஆராயவும், செய்யுட்களை இயற்றவும் ஒர் அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்பே பிற்காலத்தில் சங்கம் என்றானது.

“தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மாறுகின் மதுரை”.

சிறுபாணாற்றுப்படை கூறும் செய்தியில் மதுரையில் தமிழ் நிலைபெற்று வாழ்ந்திருக்கிறது என்பதை நாம் இதன்மூலம் அறியமுடிகிறது.

சங்க காலத்தில் தமிழ்நாட்டின் எல்லைகள் என்பது வடக்கே வேங்கடம் முதல் தெற்கில் குமரி வரை தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்திருந்த தேசமே தமிழ்நாடு என்றழைக்கப்பட்டது.

கிமு 500 முதல் கிபி 200 வரை ஓலைச்சுவடிகளில் இயற்றப்பட்ட எண்ணற்ற பாடல்கள் கால சூழ்நிலைகளால் அழிந்துபோக, அதில் எஞ்சியவற்றை பாதுகாத்து தொகுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கால அரசர்கள் புலவர்களின் துணையோடு செயல்பட்டனர். அவ்வாறு தொகுக்கப்பட்டவையே எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்.

கிபி 600 ல் வாழ்ந்த திருநாவுக்கரசர் சிவபெருமானை சங்கத்தோடு இணைத்துப் பாடுகிறார். அதாவது தருமி என்னும் ஏழை புலவனுக்குக் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற குறுந்தொகை பாடலை எழுதி கொடுத்திருக்கிறார் என்ற செய்தியும்,

“நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்கிழி தருமிக்க அருளினோன்”

என்று கூறுகிறார்.

இதுமட்டுமல்ல, வடமொழி வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு தமிழ்ப்படுத்தியது. மதுராபுரி சங்கம் என்று சின்னமனூர் செப்பேடுகள் வாயிலாகவும், மேலும் அந்த இலக்கியத்தில் சீதையை தேடச் சென்ற வானவரை நோக்கி சுக்ரீவன் “ தென்பொதிகை மலையில் அகஸ்திய முனிவரின் தமிழ் சங்கம் உள்ளது. அதனை காண்பீர் என்று கூறியதாக செய்தி வருகிறது.

மேலும் பிலினி, தாலமி போன்ற மேல்நாட்டு அறிஞர்களும், இலங்கையின் வரலாற்று நூல்களான, மகாவம்சம், இராஜாவளி, இராஜரத்தினகிரி, போன்ற நூல்களும் சங்கம் இருந்தமைக்கு சான்றாக நிற்கின்றன.

தமிழ்மொழியைப் போல் உணர்வுகளுக்கு கூட வார்த்தைகள் அமைத்து உயிர்கொடுத்த மொழி உலகில் இல்லை !

மீண்டும் அடுத்த பாகத்தில் சந்திப்போம்

தொடரும் .

✍️ முகராதி

Leave a comment